
சென்னை பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவருடைய நண்பர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சின்னதுரை. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அந்த திருமணத்தில் காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 23 வயது பெண் ஒருவரும் வந்தார். அந்த பெண்ணுடன் நட்பு முறையில் இருவரும் பழகியுள்ளனர்.
முதலில் பழகும்போது அந்த பெண் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்று இருவரும் அறியவில்லை. இதேபோல் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்கள் 3 பேரும் சந்தித்துள்ளனர்.
நாளடைவில் பழகும்போது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் என தெரிய வந்ததும், 3 பேரும் அடிக்கடி வெளியே பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இப்படி செல்லும்போது செலவுக்காக அந்தப் பெண் தன்னுடைய 10 பவுன் நகையை விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பல நாட்கள் வெளியே சுற்றியதில் சவுந்தருக்கும் அந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. சவுந்தர் திருமணமானவர். திருமணமானவர் என்று தெரிந்தும் அந்த பெண் சவுந்தரை காதலித்துள்ளார். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த சவுந்தர், அந்த பெண்ணுடம் தாலி கட்டாமலேயே வாழ்ந்து வந்தார்.
இந்த விசயம் சவுந்தரின் மனைவிக்கு தெரிய வந்தது. இதையடுத்து சவுந்தரையும், அந்த பெண்ணையும் கண்டித்துள்ளார். மேலும் சவுந்தரின் மனைவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவலை சொல்லியுள்ளார். மனைவியின் உறவினர்களும் சவுந்தரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்ப்பமான அந்த பெண், சவுந்தரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிப்பதுபோல சமாளித்து வந்த சவுந்தர், அந்த பெண்ணை தனியார் மருத்துவ ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று கருவைக் கலைக்க மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனை அறியாத அந்த பெண், தனக்கு தாலி கட்ட வேண்டும், தனது குழந்தைக்கு தகப்பன் என்ற அந்தஸ்து வேண்டும் என்று சவுந்தரை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
சில வாரங்கள் கழித்து கருவுற்ற பெண்ணுக்கு வரும் அறிகுறிகள் தனக்கு வரவில்லையே என்று சந்தேகப்பட்ட அந்த பெண், மருத்துவ ஆய்வகம் சென்று சோதித்தபோது, தனது கரு கலைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். இப்படி குடும்ப மானத்தை வாங்கத்தான் இங்கு இருக்கியா? என்று மகளை கண்டித்த அவர், சவுந்தரையும், சின்னதுரையையும் சந்தித்து தனது மகளுக்கு நியாயம் கேட்டுள்ளார்.
அப்போது இவர்கள் இருவரும், அந்த பெண்ணையும், அவரது தந்தையையும் மிரட்டியுள்னர். இந்த விசயம் இப்படியே போகட்டம், நாங்களும் உங்கள் பக்கம் வரவில்லை. நீங்களும் எங்கள் பக்கம் வர வேண்டாம். இந்த விசயத்தை நாங்கள் இனி பேசமாட்டோம். இனி நீங்களும் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண்ணும், அவரது தந்தையும் பொன்னேரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சவுந்தர், சின்னத்துரை ஆகிய இருவரும் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.