அ.தி.மு.க வில் உள்ள மா.செ க்கள், அமைச்சர்கள், தங்கள் ஆதரவாளர்களை குளிர்விக்க ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், என்று ர.ர.க்களை அள்ளிக் கொண்டு போய் குளிர்வித்து கொண்டு வருகிறார்கள். அதுக்கும் ஒரு படி மேலே போய் திருச்சி எம்.பி. குமார் தனது ஆதரவாளர்களை டெல்லிக்கே அழைத்துச் சென்றுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மா.செ வாக இருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை மாற்றிவிட்டு எம்.பி. குமாருக்கு மா.செ பதவி கொடுத்தது முதலே கோஷ்டி பூசல்கள் தொடங்கிவிட்டது. அதனால் அமைச்சர் வெல்லமண்டி அப்செட்டாகி இருந்தாலும் எம்.பி.குமார் மேல் நிறை வசூல் போன்ற குற்றச்சாட்டுகளை கட்சி தலைமைக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் புகார் கடிதங்களை அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறார். அதை சமாளிக்க குமாரும் தலைமை வரை சரி செய்து வைத்துக் கொண்டு தள்ளாட்டத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனது கட்சி பதவிக்கு ஆபத்து வந்துவிட்டால் தனக்கு ஆதவுக் கரம் நீட்ட ஆட்கள் வேண்டுமே என்று ஏர்போர்ட் விஜி, பத்மநாதன் உள்ளிட்ட 20 பேரை 10 நாள் இன்பச் சுற்றுலாவாக டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
இதைப் பார்த்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடனடியாக முடிவெடுத்து 6 சொகுசு பேருந்துகளில் தனது ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு குற்றாலத்திற்கு கிளம்பிவிட்டார். 3 நாட்கள் தங்கி இருந்து குளித்து கும்மாளம் போட அனைத்து செலவுகளையும் அமைச்சரே ஏற்றுக் கொண்டதால் கறி விருந்து மனக்க குளித்துக் கொண்டிருக்கிறார்கள் வெல்லமண்டி ஆதரவு ர.ர.க்கள்.
அதிலும் பல ர.ர.க்கள் இப்படி கோஷ்டி பூசல் ஏற்பட்டால் தான் நம்மள கவனிக்கிறாங்க. இல்லன்னா நம்மளை திரும்பிக் கூட பார்க்கமாட்டாங்க. இப்ப வெல்லமண்டிக்கு மறுபடியும் கட்சி பதவி வாங்க நாம கை தூக்கணும் அதுக்காகத் தான் இந்த குற்றால குளியல் என்றும் குமார் எம்.பி. க்கு கட்சி பதவியை காக்க டெல்லி போனவங்க கை தூக்கணும் அதுக்காகத் தான் அந்த டூர் என்று கமென்ட் அடித்தும் சிரித்துக் கொள்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கிய குற்றால சுற்றுலா, திருச்சி, கரூர் மாவட்டங்களை கடந்துள்ளது. அடுத்து எந்த மாவட்டமோ என்று டெல்டாவில் உள்ள ர.ர.க்கள் தங்கள் மா.செ. க்களை நச்சரிக்க தொடங்கிட்டாங்களாம்.
- மகேஷ்