நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'நடிகர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீங்க சார்?' என்ற கேள்விக்கு ''பறக்கும்போது பார்ப்பேன்'' என துரைமுருகன் பதிலளிக்க, அருகில் இருந்த நிர்வாகிகள் சிரித்தனர்.
அதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், 'அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது. துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாகவும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புதிதாக மந்திரி பதவி கொடுக்கப்பட போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்களுடைய பதில் என்ன?' என்ற கேள்விக்கு, ''எனக்கு ஒன்றும் அதுபோன்ற செய்தி வரவில்லை. அதான் முதலமைச்சரே எனக்கு செய்தி வரவில்லை என்று சொல்லிவிட்டாரே''என்றார்.
'சீனியர் என்ற முறையில் துணை முதல்வர் பதவி உங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என கட்சியினர் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக வேலூர் தொகுதி மக்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு ''எதிர்பார்ப்பதை எல்லாம் கொடுத்து விட முடியுமா? எதிர்பார்க்காததும் நடக்கும். இதெல்லாம் முதலமைச்சர் அவருடைய ஆளுமைக்கு உட்பட்டு தேவையான நேரத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வார். அதில் எல்லாம் நாம் தலையிடக்கூடாது'' என்றார்.