சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல் கேட் அருகே கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரிகொடா இயக்கம் நடத்தி, அதன் தொடர்ச்சியாக டோல்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செங்குறிச்சியில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உட்பட 14 நபர்கள் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். இது சம்பந்தமான வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று (07.10.2021) இந்த வழக்கு சம்பந்தமாக வேல்முருகன் எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக நீதிபதி சண்முகநாதன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வேல்முருகன் நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த வழக்கில் என் மீது உண்மைக்குப் புறம்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளேன். என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கிலிருந்து வழக்கறிஞர்கள் துணையோடு விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அதிக கட்டணம் வசூல் செய்யும் 11 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது” என்று கூறினார்.