முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியிருந்த பொழுது அந்த சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தோடு தினகரனை கைதும் செய்திருந்தார்கள். அதே வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்கிற நபரும் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், டிடிவி.தினகரன் குறித்து சில தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த 8 ஆம் தேதி டிடிவி.தினகரனை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கோபிநாத் (31) என்ற வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனிடம் இரட்டை இலை வழக்கில் கொடுக்கப்பட்ட சம்மன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன், '' நானே தொலைக்காட்சிகளில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். சம்மன் அனுப்பினால் முறைப்படி விசாரணைக்கு ஆஜராவேன்'' என்றார்.