Published on 05/11/2023 | Edited on 05/11/2023
ஊட்டி மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் ஒரு சுற்றுலாத் தலமாக ஊட்டி உள்ளது. இங்கு மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் உலகப் பிரசித்தி பெற்றது. இது செல்லும் பாதை மலைகளும்,காடுகளும் நிறைந்த பாதை என்பதால், மழைக் காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் அவ்வப்போது ரத்து செய்யப்படும்.
நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கல்லார் ரயில் நிலையம் தொடங்கி பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் காலை புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி முடிவடையாததால் நாளையும்(5.11.2023), நாளை மறுநாளும்(6.11.2023) மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.