Skip to main content

வானமே கூரையாக வீடற்றோர்! கருணைகாட்டுமா தேசம்?    

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Homeless people in Madurai

 

மதுரை புறவழிச்சாலையில் பஸ்-ஸ்டாப் ஒன்று உள்ளது. நிழற்குடை இல்லாத அந்தப் பேருந்து  நிறுத்தத்துக்கு நிழற்குடை அமைத்துத்தரும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உள்ளூர் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அங்கே நிழற்குடை அமைத்து திறப்புவிழா நடத்தினார்கள்.    

 

திறப்புவிழா நாள் என்பதால் அன்றிரவு அந்த நிழற்குடை ஒளிவெள்ளத்தில்  மிதந்தது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். அதனால் கண்ணைப் பறிக்கும் அந்த வெளிச்சத்திலும் நிழற்குடையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். போக்குவரத்து மிகுந்த அந்தப் புறவெளிச்சாலையில் வாகன இரைச்சலுக்கிடையே தூங்குவது எளிய மனிதர்களுக்கே உரித்தானது. பகல் நேர வெயிலில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் மக்களுக்கு நிழல்தரும் அந்த நிழற்குடை, உழைப்பாளிகளின் இரவு நேரத் தூக்கத்துக்கும் இடமளித்துள்ளது.   

 

Homeless people in Madurai

 

இந்தியாவில் கணக்கெடுப்பு நடத்தியபோது, வீடுகளில் வசிக்காமல்,  நடைபாதைகள், சாலையோரங்கள், ரயில்நிலைய பிளாட்பாரங்கள், கோவில்கள், தெருக்கள் என திறந்தவெளியில் தங்கியிருந்தோர் வீடற்றவர் என வரையறுக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டில் வானமே கூரையாக வாழும்  வீடற்ற மக்களின் எண்ணிக்கை 1.77 மில்லியன் என அந்தப் புள்ளிவிபரம் சொல்கிறது. வீடற்ற தன்மை என்பது நமது தேசத்தில் முக்கிய பிரச்சனையாக இருந்துவருகிறது.    

 

சொர்க்கவாசல் என்ற திரைப்படத்துக்காக ‘சாலையோரத்தில்  வேலையற்றதுகள், வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீதக் குறிகள்,  வேந்தே! இதுதான் காலக்குறி!’ என பேரறிஞர் அண்ணா வசனம் எழுதியது, இந்தக் காலத்துக்கும் பொருந்தும். நமது தேசத்தில் தொடர்ந்து பிளாட்பாரவாசிகள் பெருகிக்கொண்டே போவது, நாட்டுக்கு நல்லதல்ல!  டிஜிட்டல் இந்தியா என்ன செய்யப்போகிறது? 

 

 

 

சார்ந்த செய்திகள்