நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்து, மேலும் பல மாநிலங்களில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில், முதற்கட்டத் தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய தொழிற் பாதுகாப்பு படையினர், ஆயுதப்படை போலீசார், கரூர், திருச்சி மாவட்ட போலீசார் என ஒரு ஷிப்டிற்கு 157 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேரில் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “முதல் கட்ட மட்டும் இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதைப் பார்க்க முடிகிறது. பிரதமர் மோடி மாண்பை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூக மக்களை குறிவைத்து தேர்தலை நடத்துவது அபாயகரமாக உள்ளது. பத்தாண்டு காலம் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால், பிரதமர் அதற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வெறுப்பு பிரச்சாரங்கள் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. இளைஞர்கள், பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் தங்கள் பைகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்துள்ளனர்.
அறிக்கையினை செய்தியாளர் மத்தியில் காட்டுகின்றனர் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான நீதி, இளைஞர்களுக்கான நீதி, மாணவர்களுக்கான நீதி ஒவ்வொன்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களின் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அப்படிப்பட்ட வேட்பாளர் முன்னரே பா.ஜ.க மாவட்டத் தலைவர் தலைமைக்கு எழுதியுள்ளார். அதனை மீறி பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியில் சீட்டு கொடுத்தது மட்டும் இல்லாமல், பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர். நாடு நடுநடுங்கி உள்ள நிலையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக் கூட கண்டிக்காமல் உள்ளார். பா.ஜ.கவினர் மீது பல பாலியல் வழக்குகள் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது” என்று கூறினார்.