இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் போரை கொலம்பியா கடுமையாக சாடி வந்தது. மேலும் இஸ்ரேல் அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தது. இது இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியது.
இந்த நிலையில் இஸ்ரேலுடனான உறவை முறித்துகொள்வதாக கொலம்பியா அறிவித்துள்ளது. பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசுடனான உறவை முறித்துக் கொள்கிறோம். காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.