சேலத்தில் காவல்துறையினரைப் பார்த்து ‘சங்க அறுத்துடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே கொண்டலாம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 25ஆம் தேதி மாலையில் அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த முரளி என்பவருக்கு காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அந்த இளைஞர் இதுகுறித்து, இந்து முன்னணி அமைப்பின் சூரமங்கலம் பகுதி பொறுப்பாளராக இருந்துவந்த செல்லபாண்டியனிடம் முறையிட்டுள்ளார். அதன்பேரில் செல்லபாண்டியன், தனது நண்பர் தமிழரசன் என்பவருடன் கொண்டலாம்பட்டி சோதனைச்சாவடிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவர், அங்கு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்லியம் ஜேம்ஸ் உள்ளிட்ட காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது, காவல்துறையினரை ஒருமையில் ஆபாசமாகப் பேசியதோடு, ‘சங்கை அறுத்துடுவேன்’, ‘செக்போஸ்ட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திடுவேன்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். திடீரென்று அவர், வில்லியம் ஜேம்ஸை அடிக்கவும் பாய்ந்தார். மேலும், “நீ இந்து முன்னணிகாரன் மேலயே வழக்குப் போடுவியா... நீ இந்துவா? கிறிஸ்தவனா?” என்று கேட்டும் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் மற்ற காவலர்கள் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். செல்லபாண்டியன், காவல்துறையினரை உருட்டி மிரட்டிய செல்ஃபோன் வீடியோ காட்சிகள், அனைத்து சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவின.
இதுகுறித்து எஸ்எஸ்ஐ வில்லியம் ஜேம்ஸ், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்லபாண்டியன் (48), உடன் வந்த அவருடைய நண்பர் தமிழரசன் (23) ஆகியோர் மீது அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல், மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் திடீரென்று தலைமறைவாவிட்டனர்.
அவர்களைப் பிடிக்க காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். இருவரையும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) காலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் செல்லபாண்டியன், சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்துவருவதும், இந்து முன்னணி அமைப்பில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு சேர்ந்து பணியாற்றிவருவதும் தெரியவந்தது. பிடிபட்ட மற்றொருவரான தமிழரசன், கொண்டலாம்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் வசிப்பதும், கந்துவட்டி தொழில் செய்துவருவதும், செல்லபாண்டியன் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது.
இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களைச் சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, செல்லபாண்டியன் இந்து முன்னணி அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சேலம் கோட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.