மின்சாரம் தாக்கி பலியான யானை தந்தங்களை வெட்டி தமிழகத்தில் இருந்து கேரளாவிற்க கடத்திய இருவரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனத்துறை அதிகாரி அனுராஜ் தலைமையிலான வனத்துறையினர் குமுளி அருகே உள்ள ரோசாப்பூக் கண்டம் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பொழுது நடந்து சென்ற இருவரை சோதனையிட்டனர்.
அவர்களின் பையில் இரண்டு யானை தந்தங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கங்கா, பிரபா என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து தந்தங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். இது சம்மந்தமாக வனத்துறை அதிகாரி அனுராஜ் கூறியதாவது...
வெண்ணியாறு வனப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடப்பதாகவும், இறந்த யானையிடமிருந்து தந்தங்களை எடுத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கூறினார்கள். அவர்களிடமிருந்து கைது செய்யப்பட்ட இரு தந்தங்களும் 10கிலோ எடை கொண்டதாகும். அதை குமுளியில் பாபு என்பவரிடம் விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளனர். யானை இறந்தது தந்தங்களை வெட்டி கடத்தியது தமிழகப் பகுதியாக இருப்பதால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளையும் அந்த தந்தங்களையும் கம்பம் கிழக்கு வன அலுவலர் தினேஷிடம் ஒப்படைத்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் நாம் விசாரித்த போது... யானைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுருளிப்பட்டி, என்.டி.பட்டி, கே.என்.பட்டி பகுதிகளில் யானைகள் அடுத்தடுத்து பலியானதால் வெண்ணியாறு வனப்பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து காமையன்பட்டி பகுதிக்கு 22,000 வோல்ட் மின்கம்பி வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த மின் வழித்தடத்தில் உடுப்பியாறு பகுதியில் பெரிய கொடியை கடித்து இழுத்த போது அதன் நுணிப்பகுதி மின் கம்பியில் போட்டு மின்சாரம் பாய்ந்து யானை இறந்திருக்கலாம் என்று தெரிகிறது!