Skip to main content

அதிவிரைவு படையினர் முகாம் - பரபரப்பில் டெல்டா மாவட்டங்கள்!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
athirati police


 

காவிரி விவகாரத்தால் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர் கும்பகோணம் பகுதியில் குவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கி தீர்ப்பை அமல்படுத்த கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,  என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

 

 காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ்,  கம்யூனிஸிட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தமாகா, காவிரி உரிமை மீட்பு குழுவினர் என பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் காவிரியில் தமிழகத்துக்குரிய உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என பிரச்சார பயணம், பேரணி போன்றவையும் நாள்தோறும் டெல்டா மாவட்டங்களில் ஏதாவது ஒரு அமைப்பு, அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்டே வருகிறது.

இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம் ஆகிய இடங்களில் ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதும், நெடுவாசலில் ஹைட்டோரகார்பன் எடுக்கும் முயற்சியும், கடலூர் தொடங்கி கடற்கரையோர டெல்டா பகுதியில் 110 இடங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கப்போவதாக மத்திய அரசின் அறிவிப்பால் டெல்டா பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கதிராமங்கலத்தில் தொடர்ந்து 346 வது நாளாக தொடர் போராட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

 

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி டெல்டா மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

 

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிவிரைவு படையினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் குவித்துள்ளனர். 

 

தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் தங்கியுள்ள இந்த வீரர்கள் நேற்று திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்கு வந்து, எப்படி இந்த ஊர்களுக்கு வந்து செல்வது, அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்து வந்து டிஎஸ்பிக்களை சந்தித்து, தங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா, அது எந்த மாதிரியான பிரச்சினை, மதக்கலவரம் உண்டா, ஆண்டுதோறும் ஏற்படும் பிரச்சினைகள் உண்டா என கேட்டுவிட்டு மீண்டும் தஞ்சாவூர் சென்றனர். தஞ்சாவூரில் ஒரு வார காலத்துக்கு தங்கியிருக்கும் இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.

 

இதுகுறித்து கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி கூறுகையில்," மத்திய பாதுகாப்பு படையின்  கோவையில் உள்ள 105 பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப். கிளாரண்ஸ் தலைமையில் 40 வீரர்கள் கும்பகோணத்துக்கு  வருகை தந்தனர். இந்த பகுதியில் ஏதேனும் கலவரம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் உள்ளதா என கேட்டனர். இங்கு அதுபோன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றதும். சுமார் ஒரு மணி நேரம் இங்கிருந்துவிட்டு பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றனர்", என்றார்.

சார்ந்த செய்திகள்