அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி (25.10.2023) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்ப் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கிலப் பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 7 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஹால் டிக்கெட்டை கடந்த டிசம்பர் மாதத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வுக்குத் தயாராகி இருந்தனர். ஆனால், டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த மழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு (நாளை) ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று (03-01-24) தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்த வழக்கில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 41,485 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்தால் தேர்வு நடைமுறையை பாதிக்கும். அதனால், மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்’ எனக் கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், மனுதாரர்களின் கோரிக்கைக்கு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் 7 ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என ஆணை பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.