அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவரைச் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான 50- க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி உள்ளிட்டவையைப் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், இதனை முற்றிலும் மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தன்னிடம் எழுதிக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அதிகாரிகள் கொடுத்த ஆவணத்தையும் காண்பித்தார்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீட்டிற்கு நேற்று (22/01/2022) இரவு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
இச்சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, முல்லைவேந்தன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.