ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் குமரேஸ். இவர்கள் இருவரும் நேற்று ஈரோட்டுக்கு வந்து ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2000 ரூபாய் நோட்டை மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் கொடுத்தனர். மசாஜ் செய்ய ஆயிரம் ரூபாய் போக மீதி சில்லறை இல்லையென்று, சில்லறை மாற்ற மசாஜ் ஊழியர் அருகில் உள்ள கடைக்கு சென்று ரூபாயை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார்.
2000 ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் அந்த ரூபாய் நோட்டை சோதனை செய்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. அந்த நபர் மசாஜ் சென்டர் ஊழியரிடம் இது கள்ள நோட்டு என்று தெரிவித்துள்ளார். இதன்பிறகு மசாஜ் சென்டர் ஊழியர் ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, குமரேஸ் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். உல்லாசமாக, சொகுசாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். குமரேஸிடம் இருந்த காரை அடகு வைத்து இந்த வெங்கடேஷ் பணம் வாங்கி கொடுத்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சொகுசு வாழ்க்கை வாழ பணம் சம்பாதிக்க என்ன வழி என்று இருவரும் இணையதளத்தில் தேடி உள்ளனர். அதில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவது குறித்த சில தகவல்கள் கிடைத்தது.
இதன் பிறகு அவர்கள் இருவரும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு பிரிண்டர் எந்திரத்தை வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தில் பணத்தை அச்சிட்டுள்ளனர். அந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளனர். கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக பிரிண்டரை உபயோகப் படுத்தி கள்ள நோட்டு அச்சிட்டு வந்துள்ளனர். ஈரோடு மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் அந்த பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளார்கள்.
இவர்கள் பிரிண்டெடுக்கும் கள்ள நோட்டுகள் அப்படியே ஒரிஜினல் ரூபாய் நோட்டு போன்று இருந்ததால் இவர்களுக்கு வசதியாக போனது இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு, 200 ரூபாய் நோட்டு அச்சு அசலாக அப்படியே இருந்துள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் கள்ள நோட்டுக்கள் இவர்கள் அச்சிட்டு மளிகை கடை முதல் சலூன் கடை வரை மாற்றியுள்ளனர். இவர்களைப் போல ஏராளமான கள்ள நோட்டு பேர்வழிகள் இப்போது அதிகமாகி விட்டனர்" என்றனர்.