தாய்ப் பாசம் கிடைக்காமல் ஏங்கிய குழந்தையின் அம்மாவுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு சிறுமி என்னிடம் வந்து தனது அம்மா பாசம் காட்டவில்லை என்றும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து கொண்டு தன்னை கண்டுகொள்ளவில்லையென்று சந்தேகத்துடன் கூறினாள். அதோடு தான் நல்ல மதிப்பெண் பெற்ற மார்க் சீட்டை காண்பித்தால் கூட ஓரமாக வைத்துவிட்டு சமூக வலைத்தள நண்பர்களுடன் பேசி சிரித்துக்கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு தன்னிடம் நேரம் செலவிடாமல் இருப்பதாகும் வேதனையுடன் தெரிவித்தாள். பின்பு அந்த சிறுமியின் அம்மா தன் கணவரின் மோசமான நடவடிக்கையால் தற்போது அவரை பிரிந்து தன் தம்பியின் சம்பாத்தியத்தில் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்.
அந்த அம்மாவை அழைத்துப் பேசிய போது, முன்பு இருந்த திருமண வாழ்க்கையில் தான் அனுபவித்த கொடுமைகளை வரிசையாக அடுக்கி தனக்கு ஆறுதலாக யாரும் இல்லை என்பதையும் அதனால் சமூக வலைத்தளங்களில் நண்பர்களிடம் பேசி தனக்குத்தானே ஆறுதல் படுத்திக்கொள்வதையும் கூறினார். ஆனால் அவருக்கு தனது மகளின் வேதனை புரியாமல் இருந்தது. இதனால் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு முன்பு அந்த அம்மாவிற்கு கவுன்சிலிங் கொடுக்க தொடங்கினேன். நான் அந்த அம்மாவிடம், உங்களுக்கு நடந்து முடிந்த நினைவுகள் கஷ்டமாக இருக்கலாம் ஆனால் உங்களின் நடவடிக்கையால் உங்களின் மகள் கஷ்டப்படுகிறாள், பாசத்திற்கு ஏங்குகிறாள். அதனால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மகள் மீது கவனம் செலுத்துங்கள் என்றேன். ஆனால் அந்த அம்மா தொடர்ந்து தன்னுடைய தற்போதைய தவறை உணராமல் அதை நியாயப்படுத்தும் வகையில் பழைய நினைவுகளையே அடிக்கடி சொல்லி வந்தார்.
சில செசன்களுக்கு பிறகு அந்த அம்மாவிடம், உங்களுடைய அடையாளத்தைக் கடந்த காலத்தில் தேடாமல் இப்போது உங்களுக்குள் இருக்கும் திறமையின் மூலம் அதைவிட்டு வெளி வர முயற்சியுங்கள். இல்லையென்றால் உங்கள் மகள் குறுகிய வட்டத்துக்குள் மிகவும் கஷ்டப்படுவாள். இப்போது தம்பியின் உதவியாலும் மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்களினாலும் வாழ்க்கையை நடத்திவிடமுடியும். ஆனால் உங்கள் தம்பிக்குத் திருமணம் நடந்து பிறகு வாங்கிய கடனை தர முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் முடிந்தளவிற்கு உங்களுடைய திறமையால் பயணியுங்கள் என்றேன். நான் சொன்னதை அந்த அம்மா புரிந்துகொண்டாலும் அதை ஏற்க மறுத்து கடந்த காலத்தில் கணவன் செய்த கொடுமைகளைக் கூறி சமாளித்துக் கொண்டே இருந்தார். முடிந்தளவிற்கு அந்த அம்மாவைக் குழந்தையின் நலத்தில் கவனம் செலுத்தச் சொல்லி இருக்கிறேன். அந்த குழந்தையிடமும் அம்மா கவனித்துக்கொள்வார் என்று சமாதானப்படுத்தி இருக்கிறேன். முழுமையாக அந்த அம்மா தன்னை மாற்றிக்கொண்டால் தான் அந்த சிறுமிக்கு அடுத்து கவுன்சிலிங் கொடுக்க முடியும். அதனால் தொடர்ந்து அந்த அம்மாவுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன்.
பெற்றோர்கள் ஏனோதானோவென்று குழந்தைகளைக் கவனிக்காமல் அவர்கள் வரைந்த சிறிய வரைபடங்களைக் காண்பித்தால்கூட அதில் கவனம் செலுத்தி உற்சாகப்படுத்துங்கள். அந்த வரைபடங்கள் நன்றாக இருக்காது இருந்தாலும் அந்த வரைபடத்தை எப்படி இன்னும் அழகாக மாற்ற முடியும் என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கற்றுக்கொடுங்கள். இதுபோன்ற சில சின்ன சின்ன விஷயங்களில் குழந்தைகள் மீது பெற்றோர்கள் செலுத்தும் கவனம் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றார்.