எதிர்ப்பாராத விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று (30/12/2021) மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று (30/12/2021) மாலை அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
இந்த நிலையில் சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30/12/2021) நள்ளிரவு சென்னை பூவிருந்தமல்லி ஹை ரோடு, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.
பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.