Skip to main content

குரூப் 1 தேர்வு முறைகேடு! சிபிஐ விசாரணை கோரும் திமுக மனுவுக்கு அனுமதி!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015-ல் நடத்திய குரூப் 1 தேர்வு முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய  திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 

Group 1 selection ; DMK seeks CBI probe

 

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தேர்வை ரத்து செய்யக்கோரி திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.  இந்நிலையில்,  இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த முறைகேட்டை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை அனுமதிக்க வேண்டுமென்றும் கோரினார்.

மேலும், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 63 பேர் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்றும், இந்த முறைகேட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். முறைகேட்டை அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், இந்த முறைகேட்டை விசாரித்து வந்த 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு இருப்பதாகவும், முறைகேட்டில் தொடர்புடையவர்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

இந்த முறைகேட்டால் வருங்கால தமிழ்நாடே ஊழல் மிகுந்ததாக மாறக்கூடிய  அபாயம்  இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு அனுமதியளித்த நீதிபதிகள்,   விசாரணையை பிப்ரவரி  28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்