Skip to main content

பசுமைச் சாலை: ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி- ஏமாற்று வேலை! ராமதாஸ் பகீர் தகவல்!

Published on 24/06/2018 | Edited on 24/06/2018


பசுமை வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தில் ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது மோசடி- ஏமாற்று வேலை.. எந்த நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்பதை பினாமி ஆட்சியாளர்களோ, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரோ விளக்கத் தயாரா? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையிலிருந்து சேலத்திற்கு ரூ.10,000 கோடியில் அமைக்கப்படவிருக்கும் பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் பினாமி அரசு, உழவர்களுக்கு பணத்தாசைக் காட்டி நிலங்களை பறித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. நிலங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு தருவதாக அரசு கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.

 

 

சென்னை - சேலம் 8 வழிச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி சேலம் மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமுறை தலைமுறையாக தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை தாரை வார்க்க மறுக்கும் விவசாயிகள், தங்கள் நிலங்களை அளவீடு செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை காவல்துறை மூலம் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் அரசு, அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக நிலங்களை அளவீடு செய்து வருகிறது. ஆனாலும் போராட்டங்கள் நீடிக்கின்றன. இதுவரை சுமார் 25 கி.மீ தொலைவுக்கு மட்டுமே நில அளவை பணிகள் முடிந்துள்ள நிலையில், நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100 உழவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட்டு விட்ட போதிலும், அவர்களின் எதிர்ப்பால் அச்சமடைந்துள்ள அரசு அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவர் நினைப்பதை நிறைவேற்றிக் கொடுப்பதற்காகவே மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பசுமைச் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால், இது அப்பட்டமான பொய் ஆகும். பசுமைச் சாலைத் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களே இதை நிரூபிக்க போதுமானவை ஆகும்.
 


மொத்தம் 277 கி.மீ. நீள பசுமைவழிச் சாலைக்காக 5 மாவட்டங்களில் 2554 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இது தவிர காஞ்சிபுரம், சேத்பட், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இணைப்புச் சாலைகள் அமைப்பதற்காக 237 ஹெக்டேர் நிலங்கள் எடுக்கப்படவுள்ளன. மாவட்ட வாரியாக பார்த்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1327 ஹெக்டேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 483 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில் 406 ஹெக்டேர், தருமபுரி மாவட்டத்தில் 298 ஹெக்டேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஹெக்டேர், சாலையின் முக்கிய இடங்களில் கூடுதல் இடம் ஒதுக்குவதற்காக 232 ஹெக்டேர் என 2791 ஹெக்டேர் நிலங்கள் எடுக்கப்பட வேண்டும். சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது இந்த நிலங்களை கையகப்படுத்த மிகக்குறைந்த தொகையே உழவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி விலையாக ஹெக்டேருக்கு ரூ.75 லட்சம், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.25 லட்சம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.09 லட்சம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.07 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட இரண்டரை மடங்கு முதல் அதிகபட்சமாக நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.1.87 கோடி முதல் ரூ.3 கோடி வரையும், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.62.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.22.50 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையும் மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும். இந்த விலை கூட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கான இழப்பீட்டையும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் உண்மை நிலை எனும் போது எங்கு, எந்த நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்பதை பினாமி ஆட்சியாளர்களோ, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரோ விளக்கத் தயாரா?

 

 

இதற்கெல்லாம் மேலாக அதிக விலை வழங்கப்படுகிறது என்பதற்காகவே தாயாகவும், தெய்வமாகவும் நேசித்து வந்த நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுப்பார்கள் என்று பினாமி ஆட்சியாளர்கள் நினைத்தால், அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது என்று தான் பொருளாகும். முதலில் மிரட்டல், பின்னர் பணத்தாசை காட்டி நிலத்தை பிடுங்க முயலும் பினாமி ஆட்சியாளர்களுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. உழவுக்கு சாவுமணி அடிக்கும் பசுமைச் சாலைத் திட்டத்தை ஐந்து மாவட்ட உழவர்கள் முறியடிப்பார்கள்; அவர்களுடன் பா.ம.க.வும் இணைந்து போராடி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்