Skip to main content

'வரவேற்கிறோம் ஆனால் அவசரம் கூடாது'-ஆதவ் விலகல் குறித்து திருமாவளவன் கருத்து

Published on 15/12/2024 | Edited on 15/12/2024
'Welcome but don't rush' - Thirumavalavan's opinion on Aadhav withdrawal

அண்மையில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசியிருந்த கருத்துக்களுக்கு விசிகவின் தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறு மாதம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே  விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசுகையில், ''என்னை தூதராக பயன்படுத்தி திமுகவை சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அவர்களின் உண்மையான குறி திமுக தான் நான் இல்லை. திமுக என்கிற அரசியல் இயக்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காக சதி நிகழ்ந்து வருகிறது. விசிக எப்போதும் சனாதனத்திற்கு எதிராக தான் இருக்கும். எவ்வளவு பேரிழப்பு ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியாக விசிக இருக்கும்'' என பரபரப்பாக பேசியுள்ளார்.

'Welcome but don't rush' - Thirumavalavan's opinion on Aadhav withdrawal

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ''அவர் சொன்ன கருத்து கட்சிக்கு எதிராக அல்லது தலைமைக்கு எதிராக தான் இருந்தது. விளக்கம் அவருடைய பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு சிஸ்டத்துக்கு உள்ளே நாம் வருகின்ற பொழுது அந்த சிஸ்டத்திற்கு அக்கஸ்டமாக வேண்டும். அதற்கு உடன்பட்டு வேலை செய்ய வேண்டும். நமக்கெல்லாம் தெரியும் என்றாலும் கூட; நாம் பேசுவது சரிதான் என்றாலும் கூட; நாம் மக்களுக்காக தான் பேசுகிறோம் என்றாலும் கூட; கட்சி ஒரு கட்டுப்பாட்டை வைக்கிறது அந்த கட்டுப்பாட்டுக்குள் இருந்து இயங்க வேண்டும்.  அதனால் தான் பௌத்தத்தில் கூட 'புத்தகம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி' என்பதை ஒரு முழக்கமாக வைத்திருக்கிறார்கள். 'சங்கம்' என்பது ஒரு அமைப்பு. அமைப்புக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன் என்பதுதான் அதற்குப் பொருள். அவருடைய கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்; அவருடைய குரல் நியாயமானதாக இருக்கலாம்; அவருடைய பார்வையில் அது சரியானதாக இருக்கலாம்; ஆனால் அந்த குரல் கட்சியின் வழியாக ஒழிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி அது செயல்பட வேண்டும். அதை அவரிடத்தில் நாம் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

அவர் இந்த முடிவை எடுத்திருப்பது அவருக்கு சரி என்கிற அடிப்படையில் தான் மேற்கொண்டு இருக்கிறார். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதோ அல்லது கட்சியில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்பதோ நம்முடைய நோக்கம் இல்லை. கட்சியின் நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு அவர் இயங்க வேண்டும் என்பதுதான் அந்த இடைநீக்க நடவடிக்கையின் நோக்கம். ஆர்வம் அதிகமாக இருக்கிறது. உடனே எதையும் சாதிக்க வேண்டும் என துடிக்கிறார். ஆனால் ஒரு கட்சிக்குள் வந்த பிறகு அவர் என்ன நினைத்தாலும் தலைமையிடம் சொல்லி அல்லது தலைமையின் வாயிலாக அது வெளிப்பட வேண்டும். கட்சி எடுக்கின்ற முடிவு தனிநபராக எடுக்கின்ற முடியவில்லை. கட்சியின் என்றால் அதிலுள்ள அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் அடக்கம். ஒவ்வொரு முறையும் அதற்காக மாவட்ட அளவிலேயே செயலாளர்களை கூப்பிட்டு பேச முடியாது. அதனால்தான் உயர்நிலை குழு என்ற அமைப்பை வைத்திருக்கிறோம். ஆகவே ஒரு முக்கியமான அரசியல் முடிவுகளை நாம் எடுக்க முயல்கின்ற பொழுது உயர்நிலைக் குழுவில் கலந்தாய்வு செய்வது என்பது நடைமுறையாக இருக்கிறது. ஆனால் அவர் அதை இன்னும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு அமைப்பு, அமைப்பின் நடைமுறை ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது மிக முக்கியமானது.

ஆதார் அர்ஜுனா பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற துடிப்பைக் கொண்டிருக்கிறார். அது வரவேற்கத்தகுந்தது. தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பதை  நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவசரம் கூடாது. அமைப்புக்கு கட்டுப்பட்டு இயங்குகின்ற ஒரு பாங்கு, பக்குவம் அவசியமானது'' என்றார்.

சார்ந்த செய்திகள்