திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைபாடுகளை கண்டித்தும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பில் 7.10.2022 இன்று மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை ஒன்று, சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை இரண்டு, எழுத்தர், பதிவறை எழுத்தர், உதவியாளர், அலுவலக உதவியாளர், புள்ளியல் உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். படுக்கைகள் பற்றாக்குறை, மருத்துவமனை வளாகத்தில் காணப்படும் சுகாதார சீர்கேடு, கழிப்பறைகள் சரிவர பராமரிக்கப்படாத அவலம், மேலும் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனம் மற்றும் தொலைபேசி திருட்டு அதிகரித்து உள்ளது. சில குறிப்பிட்ட நோய்களுக்கான மருந்துகள் பற்றாக்குறை, அதோடு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று காணப்படுவது போன்ற மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் தலையிட்டு உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவிருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பில் இன்று மருத்துவமனை எதிரே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், 6ம் தேதி நேற்று அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் டீன் நேரு தலைமையில், மெடிக்கல் சூப்பிரண்ட் அருண்ராஜ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சிவா, ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் க. சுரேஷ், தலைவர் நடராஜா, மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.