என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.
மேலும் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்த கால்வாய் வெட்டும் பணி தற்காலிகமாக இன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றார். அப்போது அவரைக் கைது செய்த காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கிருந்த பாமகவினர் அன்புமணி இருந்த பேருந்தை முற்றுகையிட்டனர். மேலும் தடுப்புகளை மீறிப் போலீசார் மீது பாமகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தக் கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையினருக்குப் படுகாயம் ஏற்பட்டதால் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். பாமகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. கண்ணன் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த போராட்டத்தின் போது பாமகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 8 பேரும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 செய்தியாளர்களும் காயமடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கேமரா உள்ளிட்ட ஒளிபரப்பு பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வண்ணம் இருக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.