சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருடத்திற்கு இருமுறை ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தரிசன திருவிழாவின் முதல் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் வீதிவலம் வரும்.
இந்நிலையில் இத்தேர்களின் வடங்கள் பழுதடைந்ததையொட்டி கோயில் தீட்சிதர்களின் வேண்டுகோளை ஏற்று சிதம்பரத்தில் உள்ள பருவதராஜ குலத்தைச் சேர்ந்த பக்தர் மோகன் குடும்பத்தினர் ரூ 6 லட்சம் செலவில் திருப்பத்தூர் மாவட்டம் சிங்கபுனேரி கிராமத்தில் கடந்த 6 மாதமாக 5 தேர்களுக்கும் வடங்கள் (தேர் கயிறுகள்) தயாரிக்க ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடராஜர் கோயில் செயலாளர் வெங்கடேச தீட்சிதரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்வடங்களை வழங்கிய மோகன் குடும்பத்தினர் மற்றும் பருவதராஜகுல செல்வ விநாயகர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சண்முகம் குடும்பத்தினர் உள்ளிட்ட பர்வதராஜகுலத்தினர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து புதிய தேர் வடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பஞ்சவாத்தியங்களுடன் 4 வீதிகளில் வலம் வந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
தேர் திருவிழாவின் போது நடராஜர், சிவகாமசுந்தரி தேர்களுக்கு பருவதராஜ குலம் சார்பில் சீர்வரிசையுடன் பட்டு சாத்தப்படும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.