பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நாளை (09.12.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை வகித்து மாணவர்களுக்குப் பட்டமளித்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். இதில் டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் கனகசபாபதி சிறப்புரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு திருச்சிக்குச் செல்கிறார். ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு அளிக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் ஆளுநர் ரவி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், நாளை காலை 9 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பின்னர், 10:30 மணிக்குப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இரவு அங்கு தங்கும் ஆளுநர் ரவி, 10ஆம் தேதி காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். தமிழ்நாடு ஆளுநரின் வருகையையொட்டி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.