சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்காமல் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அதனால், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் ஊதியம் போல் இந்த மருத்துவக் கல்லூரியிலும் வழங்கவேண்டுமென பயிற்சி மருத்துவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், புதன் மாலை மருத்துவக் கல்லூரி வாயில் முன்பு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் ஊதியத்தை போல் இந்த மருத்துவ கல்லூரியிலும் வழங்க வேண்டும் என்றும் 10 மாத காலமாக வழங்காமல் நிலுவையில் உள்ள ஊதியத்தையும் வழங்க வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 3ஆம் தேதி மருத்துவத்துறை மானிய கோரிக்கை உள்ளதால் மாணவர்களின் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கும் என மாணவர்கள் கருதுகின்றனர்.