Skip to main content

லஞ்ச வேட்டையில் சிக்கிய அரசு ஊழியர்கள்! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Government employees caught in bribery!

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் நீலகண்டன்(35). இவர், தன்னுடைய தாயார் பெயரில் இருந்த நிலத்தின் ஆவணங்கள் அடிப்படையில் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு இணையதளம் மூலமாக மனு செய்துள்ளார். 

 

நீலகண்டனின் மனு, தாலுக்கா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்துவரும் தங்கராசுவிடம் விசாரணைக்குச் சென்றது. அவர், நீலகண்டனை தொடர்புகொண்டு பட்டா மாற்றம் செய்வதற்கு 6000 ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால்தான் மாற்றித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கறாராக பேரம் பேசி உள்ளார். தன் தாயார் எனக்கு ஆவணங்கள் அடிப்படையில் கொடுத்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டியது வருவாய்த்துறை ஊழியர்கள் கடமை. அப்படி இருக்க ஏன் லஞ்சமாக பணம் தரவேண்டும் என்று வேதனை அடைந்த நீலகண்டன், இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். 

 

அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீலகண்டன் இடம் ரூ.6000 ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து இதை தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் தங்கராசு இடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி நேற்று குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் தங்கராசுவிடம் நீலகண்டன் பணத்தை கொடுக்க சென்றார். அப்போது தங்கராசு அந்த பணத்தை தனது அருகிலிருந்த கிராம உதவியாளர் ஆனந்தன் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். 

 

இதையடுத்து நீலகண்டன் அந்த ஆறு ஆயிரம் ரூபாய் பணத்தை கிராம உதவியாளர் ஆனந்தனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் தேவநாதன் இன்ஸ்பெக்டர்கள் மாலா, திருவேங்கடம் மற்றும் போலீசார் சர்வேயர் தங்கராசு, கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் கிராம உதவியாளர் இருவரும் பகிரங்கமாக லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்