பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்பிந்குமார் திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கேட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். பணியின் காரணமாக திருச்சிக்கு குடிபெயர்ந்த அர்பிந்குமார் கடந்த 8 வருடங்களாக திருச்சி கல்லுக்குழி ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற சேது அதிவிரைவு ரயிலில் திருச்சியில் ஏறிய அர்பிந்குமார் பயணிகளிடம் டிக்கெட்டை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வரும் பரமக்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே ரயிலில் பயணித்துள்ளார். அப்போது கிருஷ்ணமூர்த்தி தனது இருக்கையில் தன்னுடைய பொருட்களை வைத்துவிட்டு நடைபாதையில் படுத்து தூங்கியதாகத் தெரிகிறது. இதனால் அவருக்கும் அர்பிந்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவதாம் முற்றவே, கிருஷ்ணமூர்த்தி டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாரை கன்னத்தில் அறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள ரெயில்வே போலீசிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்க, அவர்கள் இருவரையும் விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்தனர். அதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் திருச்சி ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுக்க, அதன் பேரில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்பிந்குமார், கிருஷ்ணமூர்த்தி தனது இருக்கையில் அமராமல் தன்னுடைய உடைமைகளை வைத்துவிட்டு, கதவுக்கு அருகே உள்ள நடைபாதையில் படுத்துக்கொண்டார். அதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவரது இருக்கையில் அமரும்படி கூறினேன். ஆனால், குடிபோதையில் இருந்த அவர் என்னை தகாத வார்த்தையில் திட்டியதோடு திடீரென கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.