அரசுப் பேருந்து ஒன்று பழுதாகி சாலையில் நின்ற நிலையில் அதனை மாணவிகளை வைத்து தள்ள வைத்த நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக புறப்பட்ட 36 எம் என்ற பேருந்து நடுசாலையில் பழுதாகி நின்றது. அந்த குறிப்பிட்ட பேருந்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாகப் பயணம் செய்து வந்தனர். பேருந்து நடு சாலையிலேயே பழுதாகி நின்றதால் ஓட்டுநர் பேருந்தை பலமுறை இயக்க முயன்றும் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் பேருந்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவிகள் விரைவாக கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் சாலையில் இறங்கி அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பேருந்தை தள்ளினர்.
அந்த பகுதியில் இருந்த ஒருவரால் இது தொடர்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. கல்லூரி மாணவிகளை பேருந்தை தள்ள வைத்த ஓட்டுநர் பாபு, எலக்ட்ரீஷியன் வைகுண்ட கிருஷ்ணன், சூப்பர்வைசர் சுப்பிரமணியன் பிள்ளை, நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.