Skip to main content

ரத்தவெள்ளத்தில் முடிந்த நிச்சயதார்த்தம்... பெண்ணுக்கு வில்லனான அக்கா கணவர்! 

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

Girl marriage, sister husband  made trouble

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்(30). இவர், விழுப்புரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். சந்தியா - சுந்தர் இருவரும் வேலை செய்யும் இரு வங்கிகளும் ஒரே அடுக்குமாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால் வங்கிக்கு வந்து செல்லும்போது சந்தியா - சுந்தர் இருவருக்கும் இடையே அறிமுகமான பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

 

ஒருகட்டத்தில் இருவரது காதலும் அவரவர் பெற்றோர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனடிப்படையில் நேற்று சேந்தநாடு கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  சுந்தர் - சந்தியா இருவருக்கும் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அதேசமயம், சந்தியாவின் சகோதரி கணவர் தமிழ், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும், அவர்கள் திருமணம் நடக்கக்கூடாது எனப் பல இடர்களைக் கொடுத்துள்ளார். இருந்தாலும், அதனை மீறி பெண் வீட்டார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

 

இந்த நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ், அவரது நண்பர்கள் சத்தியமூர்த்தி, வினோத் ஆகிய மூவரும் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நேரத்தில் மண்டபத்திற்குள் புகுந்து கலாட்டா செய்துள்ளனர். இதைக் கண்டு கோபமுற்ற மாப்பிள்ளை உட்பட அவரது உறவினர்கள், தமிழ் மற்றும் அவரது நண்பர்களிடம் ‘ஏன் இப்படி கலாட்டா செய்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். 

 

இதையடுத்து இரு தரப்புக்கும் மோதலாகி, ஒருவருக்கு ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில், தமிழ் மற்றும் அவரது நண்பர்கள் மாப்பிள்ளை சுந்தரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதனைத் தொடர்ந்து சுந்தரின் உறவினர்கள் அவரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

சம்பவம் குறித்து சுந்தரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார், தமிழ் மற்றும் அவர் நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்