ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழக அரசு முயற்சி என்கிறார் மார்க்சிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
’’கடந்த 22-5-2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்த போது அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்துள்ளனர்.
இத்தகைய அடக்குமுறையினை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் எனவும், கொலைகாரர்கள் எனவும் சிருஷ்டிப்பதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வந்தனர். இதுவரை துப்பாக்கிசூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு ஒரு வாரமாக பதிலளிக்க மறுத்து வந்த தமிழக அரசும், காவல்துறையும் தற்போது இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவின் பேரில் தான் துப்பாக்கிசூடு நடந்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள நிலையில் இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா? 22-ஆம் தேதி ஊர்வலத்தையொட்டி 144 தடையுத்தரவு போட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை விட்டு ஏன் வெளியேறினார்கள்?
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உத்தரவிட துணை வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? அவர்களுக்கு ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாத போது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும்?அவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன? இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா? நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன.
வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காக மத்திய மோடி அரசின் வழிகாட்டுதலில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டு பலரை கொன்று விட்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழக அரசு பல பொய்யான ஆவணங்களை தயார் செய்து வருவது தெளிவாகிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் உண்மையை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதுடன் அப்பாவியாக உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கைது படலம் தொடர்ந்து கொண்டுள்ளது. இக்கொடுமையினை எதிர்த்து அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து தலையிட்டு இவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவு
தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மே மாதம் 22-ஆம் தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால் தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிசூடுக்கு 13 உயிர்கள் பலியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், பலர் குண்டு காயங்களுடன், தடியடி காயங்களும் ஏற்படுவதை தடுத்திருக்க முடியும். ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக்குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு.
தற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். தமிழகஅரசு நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதிமன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்பிற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.