சென்னையில் விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டதாகச் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அனுமதி பெற்று, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வழிபாடு செய்து வந்தனர்.இவ்வாறு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (15.09.2024) காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில் விநாயகர் சிலை ஊர்வல பாதைகள் மற்றும் சிலை கரைக்கும் இடங்களில், சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து, சிறப்புப்பிரிவு, ஆயுதப்படை, ஆயுதப்படையின் அதிவிரைவுப் படை என 16 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த 1, 524 விநாயகர் சிலைகளில் 1, 277 விநாயகர் சிலைகளும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 591 விநாயகர் சிலைகளில் 405 விநாயகர் சிலைகளும். ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 366 விநாயகர் சிலைகளில் 196 விநாயகர் சிலைகள் உட்பட மொத்தம் 1, 878 விநாயகர் சிலைகள் இன்று (15.09.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர் காசிமேடு, மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் கடலில் அமைதியான முறையில் கரைக்கப்பட்டது.
இன்று (15.09.2024) சிறப்பாகப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்டு அமைதியான முறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்காவல் படையினரை வெகுவாக பாராட்டினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பாலவாக்கம் கடற்கரையில் லாரியில் இருந்த விநாயகர் சிலையை கிரேன் மூலம் தூக்கியபோது கீழே விழுந்து சேதமடைந்தது. அதிக எடைகொண்ட விநாயகர் சிலை கீழே விழுந்து சேதமடைந்ததால் அங்கிருந்தவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் விநாயகர் சிலை கீழே இறக்கப்படும் போது காவல்துறையினர் அவசரப்படுத்தியதால் தான் கீழே விழுந்து உடைந்ததாகக் குற்றச்சாட்டையும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.