கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ளது ஆலடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது ராஜி. இவருடைய மனைவி அம்பிகா வயது 35. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு முதல் அம்பிகாவை காணவில்லை. அவரது கணவர் ராஜி மற்றும் உறவினர்கள் உட்பட பலரும் பல்வேறு இடங்களில் தேடியும் அம்பிகா பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவர் ராஜி கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜி மனைவி அம்பிகா மாயமான தகவல் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திட்டக்குடி அருகில் உள்ள மேல ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 48 வயது பழனிவேல். கடந்த 12ஆம் தேதி முதல் வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுமதி வயது 40 ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று விருத்தாசலம் அடுத்துள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் 21 வயது இன்பமதி. இவர் விருத்தாசலத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி முதல் இன்பமதியை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் அவரது பெரியம்மா அனைவரும் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் இன்பமதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இன்பமதியை விருத்தாசலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தங்களின் குடும்ப சூழ்நிலை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாத கவலை மனதில் குழப்பம் இப்படிப் பல்வேறு மன குழப்பம் காரணமாக தலைமறைவாகி விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி மூன்று சம்பவங்களும் வெவ்வேறு ஊர்களில் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.