சேலத்தில், குடும்பத் தகராறில் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த கணவர், உறவுக்கார வாலிபரை லாரி ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள சோளம்பள்ளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (32). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி ஜீவிதா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு ஜீவிதா, அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆக. 15ம் தேதி, மாமனார் வீட்டுக்குச் சென்ற சுப்ரமணி, குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு ஜீவிதா மறுத்ததோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்ரமணி, வீட்டு அருகே நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரியை எடுத்துச்சென்று வாசலில் நின்றிருந்த மாமனார் மீது ஏற்றிக் கொல்ல முயன்றார்.
இதைக் கவனித்துவிட்ட ஜீவிதாவின் அத்தை மகன் ஜீவா (26), தடுக்க முயன்றபோது அவர் மீது லாரி மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக ஜீவாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த உறவினர்கள் சுப்ரமணியை மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் சுப்ரமணி மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.