திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதி இருந்தபோது அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1996-2001 வரை இருந்தவர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிவர்மா. தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தபின் அக்கட்சியின் மாநில செயலாளர்களில் ஒருவராக இருந்துவந்தார்.
இவர் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அவரது மகன் பெயரில் குத்தகைக்கு எடுத்து வியாபார நிறுவனம் நடத்திவருகிறார். அந்த இடம் தொடர்பாக அறநிலையத்துறைக்கும் – முன்னாள் எம்.எல்.ஏ தரப்புக்கும் இடையே சட்ட பிரச்சனை உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததும் இந்த பிரச்சனைக்குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், மணிவர்மா தரப்பு முறையிட்டுள்ளது. நான் உதவி செய்யலாம், ஆனால் திருவண்ணாமலை மாவட்ட விவகாரத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்றால் அந்த மாவட்ட அமைச்சரான எ.வ.வேலுவின் கருத்து தேவை. நீங்கள் அவரை சந்தித்துவிடுங்கள் எனச்சொல்லியதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிவர்மா கூட்டணியில் உள்ள பொதுவுடைமை கட்சி பிரமுகர் ஒருவருடன் சென்று அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்துள்ளார். அங்கு சிலரின் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி என்பதால்தானே என்னை மதிக்கவில்லை. நான் அதிமுகவுக்கு போகிறேன் என ஆலோசனை கேட்டுள்ளார். அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிய ஆலோசனையைக் கேட்டு அதிமுகவில் இணைவதற்கு திருவண்ணாமலை தெற்கு மா.செ ராமச்சந்திரன் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமியிடம் நேரம் கேட்டுள்ளார் என்கிறார்கள் மணிவர்மாவின் நண்பர்கள். அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையும் முன்பே அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து செயல்படுகிறார் என்கிறார்கள்.