
நெல்லை மாவட்டத்தில் பொட்டல்புத்தூரிலிருக்கும் அசன்மைதீன் என்பவரிடம் 2011 முதல் சுமார் 85 வயதுடைய சுந்தரி என்ற பெண் யானை வளர்ப்பு யானையாக பராமரிப்பிலிருந்தது.
உடல் தளர்ந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட யானை சுந்தரிக்கு, சிகிச்சையளித்தும் பலனின்றி கடந்த 3ம் தேதி மாலை மரணமடைந்தது. மரணமடைந்த யானையை அடக்கம் செய்வதற்காக, வனத்துறையினர், பாகனிடம் 17 ஆயிரம் செலவுத் தொகையாகக் கேட்டதாகத் தகவல் வெளியாயின.
இதையடுத்து ஆத்திரமான வனத்துறையினர் 5ம் தேதி பாகன் அசன்மைதீனைத் தொடர்பு கொண்டு யானை வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கான அசல் நகலை அலுவலகத்திற்குக் கொண்டு வரச் சொன்னதன் அடிப்படையில், பாகன் ஆவணங்களை வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
அப்போது வனத்துறையினர் யானையின் அடக்கத்திற்காகப் பெற்ற பத்தாயிரத்தை அவரிடம் ஒப்படைத்தவர்கள், அவரை ஒரு நாள் முழுவதும் அங்கேயே காத்திருக்க வைத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில், திடீரென வனத்துறை ரேஞ்சர் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் மரணமான யானையின் பாகன் அசன்மைதீன் மீது 1972ம் வருட வன உயிரினப் பாதுகாப்பு சட்டப் பிரிவு 2(5) 43(1,2) 49(A,a) மற்றும் 51 ஆகிய பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தவர்கள், ஜே.எம்.1.ம் கோர்ட்டில் ஆஜார்படுத்தி ரிமாண்ட் செய்தனர். மாஜிஸ்திரேட் ராமதாஸ் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் அசன்மைதீனிடம் யானையை விற்ற உரிமையாளர் பீர் முகைதின் மீதும் வழக்குப் பதிவு செய்தது வனத்துறை.
2011 முதல் யானை சுந்தரியை பாகன் அசன்மைதீன் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயனடைந்திருக்கிறார். ஆனால் அவரிடமிருந்த ஆவணங்கள் 2012 க்குப் பிறகு பராமரிக்கப்படவில்லை. அதனை வனத்துறையும் கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.
ஆனால் வனத்துறையினரோ பாகன், போலி ஆவணங்கள் மூலம் யானையைப் பல்வேறு ஏரியாக்களுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்திருக்கிறது. அவரிடமிருப்பது போலியானது என்பதால் அவரை வனத்துறைச் சட்டப்படி கைது செய்ததோடு யானையின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கின்றனர்.
யானைச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.