
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரியில் 3வது நாளாக இன்றும் மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டு, படிப்படியாகச் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. புழல் ஏரிக்கு நீர் வரத்து 800 அடியாக குறைந்ததால் நீர் திறப்பு 2,000 கன அடியிலிருந்து 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பருவமழை காரணமாக ஐந்து நாட்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது 5 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் ஐந்து நாட்களுக்குப் பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தொடர் கனமழை காரணமாக நவம்பர் 8 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க அனுமதிச் சீட்டு வழங்கப்படாததால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.