சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவருக்குச் சொந்தமான முருகன் ஜெனரல் ஸ்டோர் என்ற கடையில் பட்டாசு விற்பனை தீபாவளியை முன்னிட்டு நடைபெற்று வந்தது. இதற்கிடையே இன்று மாலை பட்டாசுக் கடையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். ஆனால் அதற்குள் தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைத்து வருகிறார்கள். தீ அணைக்கப்பட்ட பிறகே உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் முழுவதும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் பட்டாசுக் கடை வைப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும், பட்டாசுக் கடை வைக்க முறையான அனுமதி பெறவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த முறையான தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.