Skip to main content

"எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்" - ராமதாஸ்

Published on 28/06/2018 | Edited on 29/06/2018
pon

 

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கக் கூடாது என்று  பா.ம.க. நிறுவனர்  இராமதாஸ் வலியுறுத்துகிறார். இது குறித்த அவரது அறிக்கை:

’’கோவில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடித்து மீட்கும்  முயற்சிகளுக்கு தமிழக அரசுத் தரப்பில் போடப்படும் முட்டுக்கட்டைகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவர் பொன்.மாணிக்கவேல் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதைவிட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் ஆட்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 

 

 

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, நேர்நின்ற விசாரணை அதிகாரியான பொன்.மாணிக்கவேல்,‘‘ கோவில் சிலைகளை பாதுகாத்து  வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; சிலைக் கடத்தல் தடுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் எனக்குத் தெரியாமலும், உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமலும் மாற்றப்படுகிறார்கள். சிலைக் கடத்தல் குறித்த எனது விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது’’ என குற்றஞ்சாற்றினார். அதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரது விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் ஆணையிட்டனர்.

 

 

 

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற நூற்றுக்கணக்கான ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இவற்றை மீட்பது குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டிருந்த நிலையில் தான், இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணை அதிகாரியாக பொன். மாணிக்கவேலுவை நியமித்து கடந்த ஆண்டு ஆணையிட்டது. அதைத்  தொடர்ந்து சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் இராஜராஜன் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு குஜராத் அடுங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டிருந்த இராஜராஜன், உலகமாதேவி சிலைகளை மீட்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், அச்சிலைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அண்மையில் மீட்டு வந்து தஞ்சை பெரியகோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

 

தமிழகத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாணிக்கவேல் தலைமையிலான குழு தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தான் அவரது செயல்பாடுகளுக்கு  தமிழக ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டைப் போடத் தொடங்கியுள்ளனர். கொள்ளையடித்து கடத்தப்பட்ட சிலைகள் விலை மதிப்பற்றவை. கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்குகளை மாணிக்கவேல் குழு தீவிரமாக விசாரிக்கும் போது, அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய மறுப்பதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இவை குறித்து தனி விசாரணை நடத்தப்படவேண்டும்.

 

சிலைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தின் இந்நாள் அமைச்சர்கள் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சி வேறுபாடுகளின்றி கடந்த காலங்களில் ஆட்சி செய்த இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சிறப்புக் குழு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமானது. ஆனால், அண்மையில் பொன்.மாணிக்க வேலுவை அழைத்த முதலமைச்சர், இதுதொடர்பான வழக்குகளில் அவசரம் காட்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், அதை ஏற்க மறுத்துவிட்ட அவர், விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் தான், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாற்றுகள் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

 

சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதை தமிழக அரசு பாராட்டியிருக்க வேண்டும். சிலைக்கடத்தல் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு  தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும். மாறாக விசாரணைக்குழுவின் அதிகாரிகளை அதன் தலைவருக்கும், இவ்வழக்கை கண்காணிக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியாமல் ஆட்சியாளர்கள் மாற்றுகிறார்கள் என்றால், அதற்கான நோக்கம் நிச்சயம் நல்லதாக இருக்க முடியாது என்பது தான் உண்மை.

 

 

 

பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்யப்பட்டதில்  நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய சிறப்புக் குழு தீவிரமாக தேடி வந்த போது, அவருக்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தான் அடைக்கலம் கொடுத்தனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். கடந்த 50 ஆண்டுகளாகவே கோயில் சொத்துக்களும், உடமைகளும் ஆட்சியாளர்களால் சுருட்டப்பட்டு வருவதாக குற்றச்சாற்றுகள் உலவுகின்றன. இவற்றை பொய் என்று நிரூபிப்பதற்கு பதிலாக, இவை அனைத்தும் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்படும் வகையில் தான் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் உள்ளன. இது நல்லதல்ல.

 

தமிழக கோயில் சிலைகள் கடத்தப்பட்டது மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும்.  சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களின் நம்பிக்கைகளை சிதைத்து விடக்கூடாது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான அதிகாரம் மற்றும் வசதிகளை அரசு வழங்க வேண்டும். சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்