கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ரத்தினம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் என அவரது குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது டி.ஐ.ஜி விஜயகுமாரின் இறுதிச் சடங்கு நிகழ்வானது தொடங்கியது. இதில் டிஜிபி, ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் என ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். டிஜிபி சங்கர் ஜிவால் அவரது உடலைத் தோளில் தூக்கி வாகனத்தில் ஏற்றினார். தொடர்ந்து தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு அவரது உடலானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 21 குண்டுகள் முழங்க காவல்துறை அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.