ராமநாதபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் பரோட்டா இல்லை என்று கூறியதற்காக இளைஞர் ஒருவர் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் கமுதி அருகே அல்புஹாரி பிரியாணி கடை என்ற ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கடை என்பதால் எப்போதும் அந்த கடையில் பரபரப்பாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த கடைக்கு சாப்பிட சென்ற முத்துக்குமார் என்ற இளைஞர் பரோட்டா கேட்டுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் கடையில் பரோட்டா இல்லாததால் பரோட்டா இல்லை என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பரோட்டா இல்லை என்று கூறினால் ஹோட்டலை எரித்து விடுவேன் என முத்துக்குமார் மிரட்டல் விட்டுள்ளார். இது சிறு கைகலப்பாக மாறிய நிலையில் ஹோட்டல் உரிமையாளர் முத்துக்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹோட்டல் உரிமையாளர் தன் மீது புகார் அளித்ததால் ஆத்திரத்தில் இருந்த இளைஞர் முத்துக்குமார், சம்பவத்தன்று நேற்று இரவு மீண்டும் ஹோட்டலுக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்த பகுதிக்கு சென்று பெட்ரோல் குண்டை வீசினார். இதனால் அங்கு உணவு தயார் செய்து கொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் உள்ளிட்ட சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.