'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது' என்ற கிராம பழமொழிபோல் சம்பா அறுவடை செய்யும் நேரத்தில் நெற்கதிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்கவைத்து வாழ்வையே தலைகீழாக மாற்றியுள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நார்க்கரவந்தன்குடி, சித்தலப்பாடி, பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் பயிர் செய்துள்ளனர். நெற்பயிர்கள் அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்திருந்த விவசாயிகள் கடந்த வாரம் பொங்கல் திருவிழாவை நெல் வயல்களில் கொண்டாடியுள்ளனர்.
இந்தநிலையில் பொங்கல் முடிந்து வயலுக்கு வந்த மீதிகுடியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் நெல்களை பார்க்க வயலுக்கு வந்துள்ளார்.
வயலுக்கு வந்த அவர் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இதனையறிந்த அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது அவர் தலையில் துண்டை போட்டுகொண்டு வயலின் வரப்புகளில் உட்கார்ந்து மன உளைச்சலால் அழுதுகொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த விவசாயிகள் அவர்களும் நெஞ்சில் ஈட்டிபாய்ந்தது போல் அவருடன் அமர்ந்து வயலையே பார்த்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ராதகிருஷ்ணன் கூறுகையில், பொங்கலன்று வயலுக்கு வந்து பார்வையிட்டு மகிழ்சியாக சென்றேன். அதன்பிறகு வந்து பார்த்தபிறகு நெற்கதிர்களில் அதிகாலை நேரத்தில் மஞ்சள் நிற கட்டிகள் போல் உள்ளது. வெய்யில் அதிகமாகுபோது கருப்பு நிறமாக மாறியது. வயல்களில் பாதி அளவிற்கு இதேபோல் உள்ளது. இதுபோன்று உள்ள நெற்கதிர்களில் நெல்மணிகள் பதறுகளாக காய்ந்து வருகிறது. சுற்றுவட்ட எல்லா வயல்களிலும் இது பரவியுள்ளது.
இதனை நாங்க சின்னவயசுல இருந்த காலத்தில் நெல்பழம் என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் அப்போது நெல் மணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது வந்துள்ளது நெல்மணிகளை காலி செய்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதரமே காலியாக போகிறதே என வேதனையில் வீட்டுக்கு செல்லாமல் சரியான முறையில் சாப்பிடகூட முடியாமல் வாங்கிய கடனை எப்படி கட்டபோகிறோம் என்ற வேதனையில் வயலை பார்த்து வயிறு எறிகிறது என்றார்.
அதே ஊரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், நாங்க பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம் இது போன்றவற்றை பார்த்தது இல்லை. தற்போது தான் இது போன்று பார்கிறோம். இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தனியார் மருந்து கடைகளுக்கு சென்று நெற்பயிரில் மஞ்சள் கட்டிபோல் வந்துள்ளது என்று கூறி மருந்துகளை வாங்கி வந்து மூன்று முறை அடித்தோம் எந்த மருந்திற்கும் அது எடுபடவில்லை. தினந்தோறும் அது பல வயல்களுக்கு காற்றில் பரவிகொண்டு இருக்கிறது. தற்போது கதிர் பிடிக்கும் வயல்களில் கூட இது பரவியுள்ளது. ஒரு முறை மருந்து அடிக்க ரூ 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது விளைந்த நெல்லில் பாதியளவிற்கு தேறுமா? என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அறுப்பு கூலிகூட மிஞ்சாது பயிர் செய்ததிற்கு மாட்டுக்கு வக்கில் தான் மிஞ்சும். எனவே அரசு இந்த நோய் வராமல் தக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நெற்பழம் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறார்.
இதுகுறித்து சம்பந்தபட்ட வேளாண் அதிகாரிகளோ இது லட்சுமி வைரஸ் என்ற வகையைச் சார்ந்த நோயாகும். அதிக மகசூல் உள்ள வயல்களில் இந்த நோய் மின்னல் வேகத்தில் காற்று மூலம் பரவும் தன்மை கொண்டதாகும் கடந்த பொங்கலுக்கு பிறகு நெல் பயிர்களில் இந்த நோய் மிக வேகமாக தாக்கி கதிர்கள் அனைத்தும் பதறாக மாற்றியுள்ளது. ஒவ்வொரு கதிரிலும் சுமார் 100 நெல்மணிகளை கொண்டதை பாதி நெல் மணிகளில் வைரஸ் பூச்சி தாக்கி பதறாத மாற்றுகின்றது. இனிமே இதனை எந்த மருந்துகளாலும் கட்டுப்படுத்த முடியாது. விவசாயிகள் விலைகுறைவாக கிடைக்கும் சில போலி மருந்துகளை அடிப்பதால் இதுபோன்ற வைரஸ்களை எளிதில் கட்டுபடுத்த முடியவில்லை என கூறுகிறார்கள்.
விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாக தொடர் வறட்சியாலும், தண்ணீராலும் எங்கள் மகசூல் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு குறித்த நேரத்தில் வீராணத்தில் இருந்து தண்ணீர் வந்தது. மழையும் சரியான நேரத்தில் பெய்தது. எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்சியாக ,இருந்தோம். இந்த லட்சுமி வைரஸ் தாக்கியதால் எங்கள் எங்களின் மகிழ்ச்சி வாழ்வாதரம் தலைகீழாக மாறிவிட்டது. வைரஸ் தாக்கிய நெல் மற்றும் வைக்கோலை வாங்க எவரும் வர மாட்டார்கள் நாங்கள் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி பயிர் செய்துள்ளோம். அந்தக் கடனை அடைப்பது எப்படி என்றும் எங்களுக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க வேதனையில் கூறுகிறார்கள்.
எனவே அரசு எங்களுக்கு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கவேண்டும் என்கின்றனர் 'நமக்கு சோறு போடும் விவசாயிகள்'.