Skip to main content

“விவசாயிகளின் கோரிக்கை முதல்வரிடம் கொண்டுசெல்லப்படும்” - அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

"Farmers' demand will be taken to the chiefMinister" - Minister KN Nehru assured!

 

போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் தொடர்ந்து உறுதிமொழி வாசித்து ஏற்றுக்கொண்டனர். நிகழ்வில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம், விழிப்புணர்வு பாடல் மற்றும் காவல் துறையில் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு போதைப் பொருட்களை ஒழிப்பது தொடர்பாக தகவல்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு பேரணி போன்றவை நடத்தப்பட உள்ளது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்லூரிகள் இணைந்து போதைப் பொருட்களை தடுப்பதற்காக கூட்டு முயற்சியில் ஈடுபடும்போது கண்டிப்பாக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

திருச்சியில் பத்தாண்டுகளாக சாலைகளே போடாமல் இருந்தது. ஆனால், பல்வேறு இடங்களில் நாங்கள் சரி செய்வதற்காக பழைய சாலையை தோண்டி புது சாலைகளை உருவாக்கி வருகிறோம். சாலை சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை பல இடங்களில் சாலைகள் முன்னுக்கு பின் இருப்பது உண்மைதான்.

 

தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு மினி விளையாட்டு அரங்கை உருவாக்க உள்ளதாக தமிழக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். திருச்சி கள்ளிக்குடியில் உருவாக்கப்பட்ட மார்கெட் வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனை நெல் கொள்முதல் நிலையமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்வோம். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்