Skip to main content

தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகள் கட்டண நிர்ணய உத்தரவை எதிர்த்து வழக்கு!  உயர் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
Private Teacher Education Colleges Case Against Tariff Setting Higher Education Department to reply!

 

தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறையும், கட்டண நிர்ணயக் குழுவும்,  ஜூன் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க,  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து,  தமிழக உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016-ம் ஆண்டு,  கல்லூரிகளின் செலவு கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016 – 17 முதல் 2018 – 19  வரையிலான மூன்று   கல்வியாண்டுகளுக்கு, இந்தக் கட்டணங்கள் அமலில் இருந்தன.

2019 – 20 முதல் 2021 – 22 -ம் கல்வியாண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து,  கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. விதிகளைப் பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக்கூறி கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில்,  அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் மொத்தமுள்ள 696 கல்லூரிகளில், 285 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில், செலவுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்த 85 கல்லூரிகளுக்கு, ஒரு மாணவருக்கு 42 ஆயிரத்து 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது.

கட்டண நிர்ணயத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காத 200 கல்லூரிகளுக்கு,  25 ஆயிரம் ரூபாயும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 411 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பிக்காததால், அவற்றுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து,  கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில்,   கட்டண விகிதங்களை மாற்றியமைக்கக்கோரி,  உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், பல கல்லூரிகள் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக்கோரி விண்ணப்பித்த நிலையில், கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான குழுவுக்கு,  புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவுக்கு ஜூன் 29-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறைக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்