விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு நேற்று (15-12-24) மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, இளையராஜாவுக்கு மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சி மேடையில் இளையராஜா ஏறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லாம் சரியாக நடந்த நிலையில், ஆன்மிகச் சிலிர்ப்பு மேலிட, ஜீயர்கள் மற்றும் அய்யங்கார்களுடன் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார். அப்போது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்துக்குள் அவர்களுடன் சென்றார். ஆனால் உடனே அவர் தடுக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறிய இளையராஜா, பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார். கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த செயல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து கஸ்தூரி பேசுகையில், ''இளையராஜா என்பவர் ஒரு இசைக் கடவுள். கடவுளுக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்று அவசியமே இல்லை. இளையராஜா எங்கே போனாலும் அவரே ஒரு கடவுள் அவரே கோயில் தான். அவரை என்னவோ உள்ளே விடவில்லை; கோவிலுக்குள் விடவில்லை என்பது போன்ற சர்ச்சை வந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து எத்தனை நாளுக்கு தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. கருவறைக்குள் எந்த ஜாதியினரும் போக முடியாது. அது ராஜா சாராகவே இருந்தாலும் சரி கஸ்தூரியாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியாது. கூட இருப்பது என்னுடைய தெலுங்கு சொந்தங்கள். தமிழ்நாடு தெலுங்கு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த என்னுடைய சகோதரர். நான் தமிழ்நாடு தெலுங்கு மக்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். அவர்கள் நினைத்தாலும் கருவறைக்குள் போக முடியாது. அது எந்த ஜாதியாக இருந்தாலும் பிராமினாக இருந்தாலும் போக முடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும் தான் போக முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அப்போ அர்ச்சகர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் போக முடியும். இவ்வளவுதான் மேட்டர். இதைப் பிரித்து பேசுகின்ற இந்த வன்மப்போக்கை கண்டித்து தான் நவம்பர் 23ஆம் தேதி கஸ்தூரி பேசினாள். அதையே தான் திரும்பவும் பேசுகிறாள்'' என்றார்.