தமிழ்நாட்டில் வெளியூரிலிருந்து யாராவது ஈரோடு, திருப்பூர், கோவை என கொங்கு மண்டல பகுதிகளுக்கு வந்தால் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு சேலை வாங்கிட்டு வாங்க, லுங்கி வாங்கிட்டு வாங்க, பனியன் வாங்கிட்டு வாங்க என்று கூறுவார்கள். காரணம் ஜவுளி ரகங்கள் ஈரோடு பகுதியில் விலை குறைவாக இருக்கும் என்பதால். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் இரவு தொடங்கி செவ்வாய் வரை இரண்டு நாட்கள் ஈரோட்டில் ஜவுளி சந்தை மிகவும் பிரபலமாக இயங்கும். மக்கள் கூட்டம் அலை மோதும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து எல்லாம் வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஒரு வாரத்திற்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு ஈரோட்டில் மட்டும் ஜவுளி வணிகம் நடைபெற்றது. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி உட்பட பல்வேறு வரி காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி வாங்கக்கூடிய வியாபாரிகளும் தற்போது குறைந்து வருகிறார்கள். இத்துறை சார்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற சூழலுக்கு வந்துள்ளார்கள். தற்போது ஈரோடு ஜவுளி சந்தையை சுற்றிச் சுற்றி வந்தாலும் அங்கு மக்கள் கூட்டம் என்பது சுத்தமாக இல்லை. பார்க்கவே பரிதாபமாக களையிழந்து காணப்படுகிறது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த ஜிஎஸ்டி வரி சுத்தமாக ஜவுளியை மரண குழிக்குள் தள்ளிக்கொண்டு வருகிறது.