Skip to main content

ஆளுங்கட்சியினர் தலையீடு! போராடும் வியாபாரிகள்!!!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Erode - Market - ADMK -merchant

 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள காய்கறி சந்தைதான். கரோனோ நோய் தொற்று பரவல் ஏற்பட்டதிலிருந்து பெரும்பாலான ஊர்களில் உள்ள காய்கறி மார்கெட், தற்காலிகமாக அந்தந்த ஊர்களின் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.


அப்படித்தான், ஈரோடு காந்திஜி  சாலையில் இயங்கி வந்த நேதாஜி காய்கறி சந்தை ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பேருந்துகள் பெரும்பாலும் இயங்க தொடங்கியதும், பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட் அடுத்ததாக ஈரோடு வ.ஊ.சி. பூங்கா மைதானத்தில் மீண்டும் தற்காலிகமாக இயங்க வ.ஊ.சி. பூங்காவில், கடைகளுக்கான செட் அமைக்கப்பட்டது. 

அதன் பணிகளும் முடிவுற்று நாளை முதல் அங்கு செயல்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அமைப்பும் அறிவித்தது.  இந்த காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் பழைய நேதாஜி மார்கெட்டில் ஆப்பிள், மாதுளை, உள்ளிட்ட பழ வகைகள் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு இந்த வ.உ.சி பூங்கா மைதானத்தில் கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதை கண்டித்து இன்று 250 க்கும் மேற்பட்ட  பழ வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


மேலும் அவர்கள் மாநகராட்சி அலுவலக  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து  மாநகராட்சி அதிகாரிகள்  பழ வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் ஒதுக்கப்படும் என உறுதி கொடுத்தனர். பிறகு பழ வியாபாரிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய, வணிகர் சங்க பேரமைப்பு ஈரோடு மாவட்ட செயலாளரும், நேதாஜி பழ வியாபாரிகள் சங்க தலைவருமான ஆர்.கே.சண்முகவேல்,  "நாங்கள் கடந்த 50 வருடங்களாக இந்த நேதாஜி தினசரி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கரோனா பாதிப்பு பிரச்சனையால் நேதாஜி சந்தை மூடப்பட்டு, தற்காலிகமாக அது பஸ் நிலையம் சென்றது. திரும்பவும் இப்போது வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு திரும்பியுள்ளது. 

 

nakkheeran app



இந்த நிலையில் காய்கறி வியாபாரிகளுக்கு மட்டும் அங்கே வியாபாரம் செய்யலாம், பழ வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாது என கூறப்பட்டது. ஆளுங்கட்சியினர் தலையீட்டால்தான் பழ வியாபாரிகள் வியாபாரம் செய்ய கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதனை கண்டித்துதான் இன்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் கடை நடத்த இடம் தருவதாக கூறியிருக்கிறார்கள்.

அப்படி தரவில்லை என்றால் வருகிற நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டத்தை நடத்துவோம். தொடர்ந்து அவர்கள் கடை கொடுக்க மறுத்தால் மூடப்பட்ட நேதாஜி தினசரி சந்தைக்கே நாங்கள் செல்வோம். ஆளுங்கட்சியினர் சுயநல போக்கோடு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். அதிகாரிகளும் இதற்கு துணை போவது வேதனையாக உள்ளது. எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்