புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உழவர் சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி உழவர் சந்தை கடந்த 23.12.2000 அன்று அப்பேதைய திமுக ஆட்சியின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறந்து வைக்கப்பட்டது. ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும்,;, போக்குவரத்துக்கும் இடையூராக இருந்ததாலும் அகற்றப்பட்டு உழவர் சந்தையோடு இணைக்கப்பட்டது. திமுக ஆட்சிகாலம் வரை இயங்கிவந்த உழவர்சந்தை அதிமுக ஆட்சியில் படிப்படியாக சிதைக்கப்பட்டது. இதனால், மீண்டும் பள்ளிவாசல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை வளாகம் தற்பொழுது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
ஆதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உழவர் சந்தை திறக்கப்படும் என்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வியாழக்கிழமையன்று காலையிலேயே உழவர் சந்தை திறப்பு விழாவிற்கு ஏராளமானோர் கூடினர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கட்சியினருடன் பேச்சுவார்தை நடத்தினர். அன்று மாலையே வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்தை நடத்தி உழவர்சந்தையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் உழவர்சந்தை திறப்புவிழா போராட்டம்; ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.
ஆலங்குடி உழவர் சந்தை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.சிவக்குமார், எஸ்.பாண்டிச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆறுமுகம், கே.நாடியம்மை, என்.தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர்.