
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணன் ஐ.பி.எஸ் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றதும் மாவட்ட காவல் துறைக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ( SHO), ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை பொது மக்களின் புகார் மனுக்களை நேரடியாக பெற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல் நிலையங்களில் இருக்க வேண்டும்.
காவல் நிலையங்களில் பார்வை நேரம் குறித்த தகவல் பலகை பொதுமக்களின் பார்வையில் படும்படி இருக்க வேண்டும். நிலைய பொறுப்பு அதிகாரிகள் பார்வை நேரத்தில் நிலையத்தில் உள்ளார்களா... என உயர் அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள்.
பார்வை நேரத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து நிலைய பொதுநாட்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பல அதிரடி உத்தரவுகளை சரவணன் பிறப்பித்துள்ளதால் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.