தினகரனின் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் கடந்த ஜனவரி மாதம் கடலூர் திருப்பாப்புலியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு நாஞ்சில் சம்பத் நேரில் ஆஜரானார். பின் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், " நான் பொது வாழ்விலிருந்து விலகி ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஜனவரி மாதம் பேசியதற்கு தற்போது இந்த வழக்கு ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்டு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் கூறப்பட்டு அரசு வழக்கறிஞரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடருமேயானால் முதல் அமைச்சரும், துணை முதலமைச்சரும் நீதிமன்ற கூண்டிலேறி ஆகவேண்டும்" என்றார்.
நாஞ்சில் சம்பத் நீதிமன்றம் வரும்போது திமுக கொடி கட்டிய வாகனத்தில் வந்தார். அதனால் 'எதிர்காலத்தில் திமுகவில் சேருவீர்களா?' என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு 'அந்த வாகனம் நண்பரின் வாகனம் என்றும், நட்பு அடிப்படையில் அந்த வாகனத்தில் வந்ததாகவும் சம்பத் தெரிவித்தார்.