விக்கிரவாண்டி தஞ்சை நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி அணைக்கரை, திருப்பனந்தாள், சோழபுரம், கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, சிறுபாலங்கள் மற்றும் சாலை சமன்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்பனந்தாள் அல் ஜாமி ஆ தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் இக்பால் என்கிற விவசாயி. திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை உரிமைதாரராக பதிவு செய்து 5 ஏக்கர் நிலத்தில் இரண்டரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வந்துள்ளார்.

நான்கு வழிச்சாலை அவரது வாழை தோப்பு வழியாக செல்கிறது. விவசாயி இக்பாலோ வாழை வெட்டும் பருவத்தை அடைந்துள்ளது, தனக்கு ஒரு மாதம் காலம் அவகாசம் கொடுங்கள் என சாலைப்பணி அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகளோ காதில்போட்டுக்கொள்ளாமல் நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். சாலைப் பணியாளர்களையும், இயந்திரங்களையும் கொண்டு விவசாயி பயிரிட்ட வாழைத்தோப்பை அழித்து சாலைப் பணிகளை செய்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து எதிர்ப்பு தெரிவித்த விவசாயி இக்பால் வாழைத்தோப்பை அழித்துவிட்டு பணிகளை செய்வது தர்மமற்றது. உரிய இழப்பீடு வழங்காவிட்டால் குடும்பத்தினரோடு சாக நேரிடும் என அதிகாரிகளிடம் முறையிட்டார். இதனை தொடரந்து வாழைத் தோப்பு அழிக்கப்பட்ட இடத்திற்கு விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் திரண்டனர். அங்கு போலிசார் குவிக்கப்பட்டு சாலைப் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இது குறித்து விவசாயி இக்பால் கூறுகையில்,"திருப்பனந்தாள் காசி மடத்துக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாய பம்பு செட்டு உடன் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். மேலும் அரசு ஆவணத்தில் குத்தகை உரிமைதாரர் பதிவு செய்து முறையாக விவசாயம் செய்து வருகிறேன். இரண்டரை ஏக்கர் நிலத்தில் கடந்த ஒரு ஆண்டாக ரூ 3 லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்து வந்தேன். தற்போது வெட்டும் தருவாயில் இருக்கிறது. ரூ 5 லட்சம் வரை கிடைக்கும். எல்லாத்தையும் அழித்துவிட்டனர். எனக்கு இருந்த ஒரே வருமானமும் போய்விட்டது.
இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளருக்கு மட்டும் இழப்பீடு வழங்காமல் பயிரிட்ட குத்தகைதாரருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். வாழைத்தோப்பு அழித்த ஆவணத்தை எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இழப்பீடு பெறுவேன். " என்றார்.